மேலபச்சக்குடி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா: ஆர்வமுடன் கலை நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடிய சிறுவர்கள்.
மேலபச்சக்குடி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா: ஆர்வமுடன் கலை நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடிய சிறுவர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மேலபச்சக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சிறுவர்களின் நடனம் மற்றும் நாடகம் பார்வையாளர்களை கவர்ந்தது.
விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சுப்பிரமணி, கவுன்சிலர் ராஜேஸ்வரி ராமசாமி தலைமை வகித்தனர்.வட்டார கல்வி அலுவலர் முத்துகுமார், உமா தேவி, அங்கயற்கண்ணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியில் முன்னதாக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள்,நாடகங்கள் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் கல்வியில் மாணவர்கள் சிறு வயது முதலே செலுத்த வேண்டிய அக்கறைகள் குறித்தும், கல்வியுடன் சேர்த்து தனி திறனை வளர்த்துக் கொள்வது எவ்வாறு என்பது குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு உரையாற்றினார்கள்.
முன்னதாக, தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் தலைமை ஆசிரியர் சுதா ராமலிங்கம் வரவேற்றார்,ஆசிரியர் பழனிவேல் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் தனியார் நிறுவன மேலாளர் ஜெகன், ஊராட்சி மன்ற உறுப்பினர் குமார், சுப்பிரமணி,மேலாண்மை குழு உறுப்பினர் நாகலட்சுமி உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஆசிரியர் வள்ளி நன்றி கூறினார்.