வி.கே.புரம் கொலை வழக்கு: 15 மணி நேரத்தில் மீதமுள்ள 5 பேரும் கைது – மொத்தம் 6 குற்றவாளிகள் சிக்கினர்
வி.கே.புரம் கொலை வழக்கு: 15 மணி நேரத்தில் மீதமுள்ள 5 பேரும் கைது – மொத்தம் 6 குற்றவாளிகள் சிக்கினர்
திருநெல்வேலி, ஆக. 4: திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் நடைபெற்ற சொரிமுத்து (30) கொலை வழக்கில், ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மீதமிருந்த 5 பேரையும் காவல்துறையினர் வெறும் 15 மணி நேரத்திற்குள் கைது செய்து வழக்கை துரிதமாகத் துப்பறிந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி வி.கே.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தன மாரியம்மன் கோவில் அருகே, முன்விரோதம் காரணமாக சொரிமுத்து பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வி.கே.புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அம்பாசமுத்திரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகள், தொழில்நுட்ப ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய அந்தோணி பிரகாஷ் ஏற்கனவே ஆகஸ்ட் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மாரியப்பன், கார்த்திக் சங்கர் ராஜா @ சிபிஇசட் ராஜா, ஸ்ரீராமகிருஷ்ணன், ஒரு சிறார் மற்றும் மைதீன் ஹனிபா ஆகிய 5 பேரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதன்மூலம், இவ்வழக்கில் தொடர்புடைய மொத்தம் 6 பேரும் காவல்துறையினரின் பிடியில் சிக்கியுள்ளனர்.
விசாரணையில், கடந்தகால முன்விரோதம் மற்றும் 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சிறுவர் கொலை வழக்கைத் தொடர்ந்து ஏற்பட்ட பகைமையே இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்தது தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பிற நபர்களின் பங்கு குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய கூடுதல் காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட தகுதியான எதிரிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.