விடைபெற்றது மாஞ்சோலை எஸ்டேட்; முழுப் பகுதியும் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில்

விடைபெற்றது மாஞ்சோலை எஸ்டேட்; முழுப் பகுதியும் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில்.

நெல்லை மாவட்டத்தில், சிங்கம்பட்டி ஜமீன் மூலம் பிபிடிசிஎல் நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த மாஞ்சோலை எஸ்டேட் நிலங்கள் அனைத்தும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி முழுமையாக தமிழ்நாடு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் ஊத்து பகுதிகள் அனைத்தும் இனி வனத்துறையின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கிய நீர்ப்பிடிப்பு மற்றும் பல்லுயிர் வளமிக்க பகுதியாக விளங்கும் மாஞ்சோலை, ஆண்டின் பெரும்பாலான நாட்களில் மழை பெறும் பகுதியாக அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் அதிக மழைப்பொழிவு பதிவாகும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும், சபரிமலை யாத்திரைக் காலங்களில் கேரள வனப்பகுதிகளில் இருந்து யானைக் கூட்டங்கள் இயற்கையான இடம்பெயர்வின் ஒரு பகுதியாக இப்பகுதிக்கு வருவது வழக்கமாகக் காணப்படுகிறது.

கடந்த 1929ஆம் ஆண்டு, மொத்தம் 8,373.57 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் பிபிடிசிஎல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. குத்தகைக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நிலங்களை வனத்துறையிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

முதற்கட்டமாக, 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் 8,152.13 ஏக்கர் நிலம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. எஞ்சிய 221.44 ஏக்கர் பரப்பில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் ஊத்து பகுதிகளில் தொழிலாளர் குடியிருப்புகள், தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் பிற கட்டுமானங்கள் இருந்ததால், அந்தப் பகுதி மட்டும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில், 29.05.2026 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மீதமிருந்த 221.44 ஏக்கர் நிலத்தையும் 15 நாட்களுக்குள் வனத்துறையிடம் ஒப்படைக்க அம்பாசமுத்திரம் துணை இயக்குநரும் வனஉயிரினக் காப்பாளரும் நோட்டீஸ் வழங்கினர். அதனைத் தொடர்ந்து, 11.07.2026 அன்று அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் முன்னிலையில், நோட்டரி பப்ளிக் சாட்சியத்துடன் ஒப்படைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் பிபிடிசிஎல் நிறுவனத்தின் சட்ட மேலாளரும் அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலரும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் எஞ்சிய 221.44 ஏக்கர் நிலமும் முறைப்படி தமிழ்நாடு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்மூலம், கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பிபிடிசிஎல் நிறுவனத்தின் குத்தகையில் இருந்த மொத்த 8,373.57 ஏக்கர் மாஞ்சோலை எஸ்டேட் நிலப்பரப்பும் முழுமையாக தமிழ்நாடு வனத்துறையின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இது களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் நீண்டகால வனப் பாதுகாப்பு, உயிரியல் இணைப்பு (Habitat Connectivity), நீர்ப்பிடிப்பு மேலாண்மை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

ஒருகாலத்தில் தேயிலைத் தோட்டங்களால் புகழ்பெற்ற மாஞ்சோலை, இன்று மீண்டும் அதன் இயற்கை அடையாளத்தை நோக்கி திரும்பியுள்ளது. அரிசிக்கொம்பன், புல்லட் ராஜா உள்ளிட்ட பல காட்டு யானைகள் இயற்கையாக உலா வந்த இந்த மழைக்காடுகள் இனி வனவிலங்குகளின் வாழ்விடப் பாதுகாப்பை மையமாகக் கொண்ட புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்