விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அறுபடை வீடுகளுக்கு இணையாக கருதப்படும் விராலிமலை முருகன் கோயிலில் மலையின் மேல், முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 207 படிகள் கொண்ட இந்த மலைக்கோயில் பல்வேறு சிறப்புகள் பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம் 11 நாள் விழாவாக வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.
விழாவின் தொடக்கமாக கொடியேற்றம் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்றது. தொடர்ந்து வரும் நாட்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளில் முருகன்- வள்ளி-தேவசேனா சமேதராக பச்சைமயில், பூதம், நாகம், யானை, சிம்மம்,பத்மமயில், வெள்ளிக்குதிரை, வெள்ளிமயில் உள்ளிட்ட பல்வேறு வாகனம் மற்றும் கேடயத்தில் எழுந்தருளி தேரோடும் வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கொடியேற்றப்பட்டு 9 ம் நாளான வரும் 22ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 10ம் நாள் தெப்பம் உற்சவமும், 11ம் நாள் விடையாற்றியுடன் வைகாசி விசாகம் பெருந்திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.