திருச்சி கிழக்கில் நடிகர் விஜய். மீண்டும் கிழக்கில் உதிக்குமா உதயசூரியன்!
பரபரப்பான திருச்சி கிழக்கு தொகுதி நிலவரம்.
திருச்சி கிழக்கில் நடிகர் விஜய் மீண்டும் கிழக்கில் உதிக்குமா உதயசூரியன்!
பரபரப்பான திருச்சி கிழக்கு தொகுதி நிலவரம்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கியமான தொகுதி ஒன்று தான் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி. இந்த தொகுதியில் மலைக்கோட்டை உச்சிபிள்ளையார்கோவில், நத்தர்ஷா பள்ளிவாசல், செயின்ட் ஜோசப் சர்ச் ஆகிய முக்கிய வழிபாட்டு தலங்கள் வருகின்றன. தினமும் லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்லும் சர்வதேச விமான நிலையம், காந்தி மார்க்கெட், என்.எஸ்.பி ரோடு, சத்திரம் பேருந்து நிலையம், ஆகிய பகுதிகள் எல்லாம் இந்த தொகுதியில் தான் அடங்கியிருக்கின்றன. இந்த தொகுதியில் சோழிய வெள்ளாளர்கள், கிறிஸ்தவ வெள்ளாளர்கள், முஸ்லிம்கள், முக்குலோத்தோர், யாதவர், தேவேந்திர குல மற்றும் ஆதிதிராவிடர்கள் ஆகியோரின் வாக்குகள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரான இனிகோ இருதயராஜ். மீண்டும் இந்த தொகுதியில் நிற்க போவதாகத்தான் தகவல்கள் வருகின்றன.

இனிகோ இருதயராஜ்
இந்த நிலையில் மண்ணின் மைந்தர்களான பலரும் திருச்சி கிழக்கு தொகுதியை குறி வைத்து திமுகவில் காய் நகர்த்தி வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை திமுக தெற்கு மாநகர செயலாளரும், கோட்டத்தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவு பெற்றவருமான மதிவாணன் சீட் ரேசில் இருக்கிறார்.

மதிவாணன்
அமைச்சர் நேரு ரூட்டில் மேயர் அன்பழகனும் அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

அன்பழகன்
அடுத்ததாக திருச்சி கிழக்கு மாநகர திமுக வர்த்தக அணி அமைப்பாளராக உள்ள, மாணவர் பருவம் முதல் திமுகவின் தீவிர பற்றாளராக இருந்து வருபவர் சரவணன் என்பவரும் ரேசில் இருக்கிறார்.
சரவணன்
இவர் அத்தொகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் சோழிய வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் பலம். அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமியும் சீட் கேட்பதாக தகவல்.
அதிமுகவிலோ அதன் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக இருக்கும் ஜெ. சீனிவாசன் சீட் ரேசில் இருக்கிறார். ஏற்கனவே துணை மேயராக இருந்த நல்ல அனுபவம் இருக்கிறது, கட்சிக்காரர்களிடமும் பொதுமக்களிடமும் நல்ல தொடர்பு இருப்பதால், மாவட்ட செயலாளர் என்கிற முறையில் இவருக்கே சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சீனிவாசன்
அடுத்ததாக எடப்பாடி பழனிச்சாமி ரூட்டில் எப்படியும் திருச்சி கிழக்கில் சீட் பெற்றே ஆக வேண்டும் என்று முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயனும் ரேசில் இருக்கிறார். மேலும் மாநகர பொருளாளர் ராஜசேகர், எட்வின் ஜெயக்குமார், மாநில ஜெ பேரவை துணை செயலாளர் ஜோதிவாணன் என்று நீண்ட பட்டியலே அதிமுகவில் சீட் கேட்டு காத்திருக்கிறார்கள்.

கே. பி பழனிவேல்
திருச்சி ,கரூர் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய பகுதியில் பிள்ளைமார் சமூத்தினர் வாக்கு பரவலாக இருக்கிறது. அதிலும் திருச்சி கிழக்கில் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இந்த பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை பேசி வருவதாகவும், அந்த வகையில் சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் அதன் மாநில துணை தலைவர் K.PT என்கிற கே.பி.பழனிவேல் என்பவரை களத்தில் நிறுத்த சங்கத்தின் தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது. கே.பி.பழனிவேல் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக திருச்சி வாழைக்காய் கமிஷன் மண்டி தொழில் நடத்தி வருகிறார். இவர் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். இவர் தான் சார்ந்த சமூக மக்கள் மட்டுமல்லாது திருச்சியில் உள்ள அனைத்து சமூக மக்களுடனும் இணக்கமாக இருந்து வருகிறார். எனவே இவருக்கு திருச்சி கிழக்கு தொகுதியை கேட்டு பெற சோழிய வேளாளர் சங்கம் முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.

திருநாவுக்கரசர்
அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் திருச்சி கிழக்கு தொகுதியை குறி வைக்கின்றன. அந்த வகையில் முன்னணியில் இருப்பது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தான். அதன் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் யாரை கை காட்டுகிறாரோ அவருக்கு சீட் உறுதி என்று சொல்லப்படுகிறது. அடுத்ததாக, திருச்சி எம்.பியாக துரை வைகோ இருப்பதால், திருச்சி கிழக்கு அவருடைய எம்.பி தொகுதிக்கு வருவதால், திருச்சி கிழக்கை மதிமுகவும் கேட்கிறது. அப்படி கிடைத்தால் மதிமுக துணை பொது செயலாளர் ரோஹையா தான் திருச்சி கிழக்கு வேட்பாளர் என்று அந்த கட்சியினரே பேசி வருகிறார்கள்.
ஜோசப் லூயிஸ்
ஆனால் காங்கிரஸ் கட்சியிலோ ஏற்கனவே எங்களிடம் இருந்த எம்.பி தொகுதியை மதிமுகவுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டோம். அதனால் இந்த முறை எங்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று இப்போதே மல்லுகட்ட ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி அடைக்கலராஜ் மகன் ஜோசப் லூயிஸ் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள்.

ரோஹயா
தமிழக வெற்றி கழகமும் இப்போது இந்த தொகுதியை குறி வைக்கிறது. த.வெ.க வியூக வகுப்பாளர் ஒருவர் எடுத்த சர்வே படி இந்த தொகுதியில் சிறுபான்மை வாக்குகள் அதிக அளவில் உள்ளதால் த.வெ.க தலைவர் விஜய் இந்த தொகுதியில் நின்றால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதால், அவரை நிற்க வைக்கவும் ஆலோசனை த.வெ.க தரப்பில் நடந்து வருவதாகவும் அதற்காக த.வெ.க சார்பில் ஒரு குழு திருச்சி கிழக்கில் இறங்கி வேலை பார்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆகையால் திருச்சி கிழக்கில் விஜய் நின்றால் மீண்டும் சூரியன் உதிக்குமா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்க்கப்படுமா என்பது போக போக தெரியும்.