மணப்பாறை முறுக்கு யாருக்கு….?    மல்லுகட்டும் கழக வேட்பாளர்கள்.

மணப்பாறை முறுக்கு யாருக்கு….?

மல்லுகட்டும் கழக வேட்பாளர்கள்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று தான் மணப்பாறை. காய்கறி மற்றும் பூ விளைச்சல் தான் இந்த பகுதியின் விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆகும். மணப்பாறை ஒன்றியம், வையம்பட்டி ஒன்றியம், பொன்னம்பட்டி பேரூராட்சி, மணப்பாறை நகராட்சி ஆகிய பகுதிகள் அடங்கியது தான் மணப்பாறை சட்டமன்ற தொகுதி. இந்த சட்டமன்ற தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ அப்துல் சமது இவர் மனித நேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் ஆவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நின்று அதிமுக வேட்பாளர் ஆன சந்திரசேகரை பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை அப்துல் சமது மீண்டும் சீட் கேட்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் திமுகவினர் இந்த முறை தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கு விட்டு தர தயார் இல்லை என்கிறார்கள்.

தொடர்ச்சியாக மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் மற்றும் இந்தியன் முஸ்லிம் லீக், மற்றும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களே நின்றதில் கடந்த முறை அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் மீது இருந்த அதிருப்தியில் தான் அப்துல் சமது உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். இந்த முறை அப்துல் சமதுவுக்கு திமுகவினர் மத்தியிலே எதிர்ப்பு பலமாக இருக்கிறது. இந்த நிலையில் தான் தொகுதியை கைபற்ற, தெற்கு ஒன்றிய செயலாளராக இருக்கும் ராமசாமி, பண்ணப்பட்டி பஞ்சாயத்து தலைவராக மூன்று முறை நன்றாக மக்கள் பணி செய்த தெற்கு மாவட்ட அவைத்தலைவர் பண்ணப்பட்டி கோவிந்தராஜ், மற்றும் வையம்பட்டி முன்னாள் ஒன்றிய சேர்மன் ராஜலட்சுமி, சமூக சேவையில் மட்டுமல்லாமல் வழக்கறிஞர் தொழிலிலும் கலக்கி வரும் வக்கீல் வெங்கடேஷ் ஆகியோர் திமுக சார்பாக சீட் ரேசில் இருக்கிறார்கள். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் நேரு ஆகியோர் எப்படியும் இந்த முறை தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட்டை  வாங்கிவிட வேண்டும் என்று முனைப்போடு இருப்பதாக கடைசி கட்ட தகவல்.

இந்த தொகுதியில் பட்டியல் சமூகத்தினர், கவுண்டர்கள், முத்தரையர், நாயக்கர், செட்டியார், கோனார், உடையார், சிறுபான்மையினர் என்று பல்வேறு சமூகத்தினர் நிறைந்த தொகுதி. அதேபோல் ஏற்கனவே காங்கிரஸ் நின்ற தொகுதி என்பதால் காங்கிரஸ் கட்சி சார்பாக மிலிட்டரி முருகன், ரமேஸ்குமார் ஆகியோர் சீட் ரேசில் இருக்கிறார்கள்.

அதிமுகவிலோ முன்னாள் எம்.எல்.ஏ சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ சின்னச்சாமி, மருத்துவர் விஜயகுமார், விராலிமலை மாவட்டக்கவுன்சிலர் RKS என்கிற ஆர்.கே சிவசாமி, மாவட்ட செயலாளர் எம்.பி குமார் என்று மணப்பாறை தொகுதியை குறி வைத்து ஏகப்பட்ட பேர் சீட் கனவில் இருக்கிறார்கள். இதில்     மணப்பாறை மருத்துவர் விஜயகுமாரை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன் நிறுத்துவதாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக முன்னாள் எம்.எல்.ஏ  சின்னச்சாமி ஒரு முறை வென்றாலும் ஒரளவு மக்கள் மனதில் நின்றதால் அவரும் மீண்டும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதில் ஆர்.கே சிவசாமி, மருத்துவர் விஜயகுமார், சின்னச்சாமி ஆகியோர் பெயர் தான் பரிந்துரையில் முன்னணியில்  உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதுவும் விஜய்குமார் எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை நான் நிற்கிறேன் என்கிறாராம். தலைமை யாருக்கு கொடுக்க போகிறதோ.

 

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்