விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாட்டில் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் இன்று பங்கேற்கின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாட்டில் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள் இன்று பங்கேற்கின்றனர். இதற்காக திருச்சியில் பிரம்மாண்ட மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி சிறுகனூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு இன்று (26.01.2024) நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பாஜக-விற்கு எதிரான இந்தியா கூட்டணியின் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகளைச் சேர்ந்த 28 கட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றயுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸிட்-லெனினிஸ்ட் கட்சியின் திப்பாங்கர் பட்டாச்சார்யா, மாநில கட்சியின் தலைவர்களான வைகோ, காதர் மொகிதீன், ஜவாஹிருல்லா, வேல்முருகன், ஈஸ்வரன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பாஜக மற்றும் இந்தியா கூட்டணியினர் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு மற்றும் பரப்புரை பணிகளை தொடங்கியுள்ள நிலையில், இந்த மாநாட்டின் மூலம் இந்திய கூட்டணியின் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளை ஒரே மேடையில் ஒருங்கிணைக்கும் முக்கிய பணியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முன்னெடுத்துள்ளார்.

மாநாடு ஏற்பாடுகள்:

இந்த மாநாட்டிற்காக சிறுகனூரில் 50 ஏக்கர் பரப்பளவில் 1000 அடி நீளம்- 500 அடி அகலத்தில் திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் பிரதான நுழைவுவாயில் பழைய நாடாளுமன்ற வடிவிலும், பக்க வாயில்கள் அம்பேத்கரின் நினைவிடத்தின் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவுப் பகுதியில் மாபெரும் புத்தக வடிவில், இந்திய அரசமைப்பின் முகவுரையும், அம்பேத்கரின் முழுவுருவச் சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மற்றும் புத்தகத்தினை விசிக தொண்டர்கள்
தற்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் விழா மேடை புதிய நாடாளுமன்ற கட்டிட வடிவில் 80 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது, மேடையின் இரு பக்கத்திலும் எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட திரையில் தலைவர்கள் பேச வரும்முன்பு அவர்கள் பேச்சுகள் ஒளிப்பரப்பப்படும், மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி, சின்னங்கள் வண்ணமயமாக ஒளிப்பரப்பப்படும்.

நிகழ்ச்சி நிரல்

இந்த மாநாட்டில் பாடகர் அறிவு அவர்கள் குழுவினரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதற்காக திடலின் வலதுபுறத்தில் பிரத்யேக மேடை அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உறுப்பினர் சேர்க்கை இணைய தளம்

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இணைய தளத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்தேக இணையதளம் வெளியிடப்படுகிறது. இதனை தொல்.திருமாவளவனுடன் இணைந்து விசிக தேர்தல் ஆலோசகரும், இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவருமான ஆதவ் அர்ஜூனா அவர்கள் வெளியிட்டு, உறுப்பினர் சேர்க்கை குறித்து தொண்டர்களுக்கு விளக்க உள்ளனர்.

இந்த மாபெரும் மாநாட்டிற்காக திட்டமிடல், வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு பணிகளை முன்னாள் ஐபேக் நிறுவனத்தில் ஊடக தொடர்பில் பணியாற்றிய மூத்த குழுவினர் தேர்தல் வியூக வல்லுனர்கள் மேற்பார்வையில் நடந்துவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்