திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில்சாலையில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்த கார் பொறியாளர் குடும்பத்தினர் தப்பித்தனர்
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில்சாலையில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்த கார் பொறியாளர் குடும்பத்தினர் தப்பித்தனர்.
திருச்சியில் சாலையில்சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் பயணித்த பொறியாளர் குடும்பத்தினர் உயிர்தப்பினர்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கேவிஆர். சுப்பிரமணியன் (43). பொறியாளரான இவர், பொங்கல் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த தனது மகன் ஹரியை, பொள்ளாச்சியில் உள்ள பள்ளி மற்றும் விடுதியில் விட்டுச் செல்வதற்காக மனைவி, கீதா (39) மற்றும் மகனுடன் பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டனர். காரை ஓட்டுநர் மணிகண்டன் ஒட்டியுள்ளார்.நேற்று (புதன்கிழமை) மாலை திருச்சி வந்த நிலையில் கீதாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சி செல்லும் முடிவை கைவிட்டு மீண்டும் தஞ்சை திரும்பியுள்ளனர்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இரவு 7.30 மணியளவில் பாலத்தின்மீது கார் சென்று கொண்டிருந்தது. பொன்மலை ரயில்வே பாலம் பழுது காரணமாக, போக்குவரத்தில் மாற்றம் செய்திருப்பதால் வாகனங்கள் நின்று நின்று ஊர்ந்து சென்றது. அப்போது திடீரென இவர்களது காரின் முன்பகுதியிலிருந்து (பேணட்) கரும்புகை வந்துள்ளது. இதனையடுத்து சுதாரித்த ஓட்டுநர் உடனடியாக அனைவரையும் கீழே இறங்கச்சொல்லியுள்ளார். காரிலிருந்து அனைவரும் இறங்கிய சற்று நேரத்தில் காரின் முன்பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கன்டோன்மென்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீ மேலும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். என்றாலும் கார் முற்றிலும் சேதமானது. தற்போதுள்ள கார்களில் எலட்ராணிக் முறையில், காரில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் கதவுகளில் உள்ள தானியங்கி பூட்டுகள் தாமாக பூட்டிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் கார்கதவுகளில் உள்ள பூட்டுகள் பூட்டும் முன்பே அனைவரும் காரிலிருந்து இறங்கியதால் அதிஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளனர். இது குறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இச்சம்பவத்தால் இப்பகுதியில் மேலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.