காவிரி, கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குளிக்கவோ, துவைக்கவோ, கால்நடைகளை ஓட்டி செல்லவோ வேண்டாம் திருச்சி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை.
காவிரி, கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குளிக்கவோ, துவைக்கவோ, கால்நடைகளை ஓட்டி செல்லவோ வேண்டாம் திருச்சி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை, நேற்று அதிகாலையில் பலத்த மழையாக பெய்தது. இன்றும் பரவலாக பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரிகள், குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரின் கொள்ளளவு அதிகரித்தது. சில இடங்களில் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது.
இந்த மழை காரணமாக சாலைகள், கடைவீதிகள், காய்கறி மார்க்கெட்டுகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. நகரப் பேருந்துகளிலும், குறைந்த தொலைவில் உள்ள மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளிலும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. தீபாவளியையொட்டி நேற்று அரசு சிறப்பு விடுமுறை அறிவித்திருந்தாலும் மழை காரணமாக மக்கள் வெளியே செல்லவிரும்பாமல் பெரும்பாலும் வீடுகளில் முடங்கிக் கிடந்தனர். இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு கலெக்டர் விடுமுறை அறிவித்துள்ள நிலையில்,விட்டு, விட்டு பெய்த தொடர் மழையால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
புறத்தாக்குடி பழைய அஞ்சல் அலுவலக தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவரது இரு காளை மாடுகள் நேற்று மாலை மின்னல் பாய்ந்து உயிரிழந்தன.
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தேசிய மீட்புப் படையில் பயிற்சி பெற்ற 55 பேர் மீட்பு உபகரணங்களுடன் காவிரி, கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற 75 பேர் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் என அடையாளம் காணப்பட்ட 52 இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தவிர, மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத் துறை, தீயணைப்புத் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்ட கலெக்டர்
எச்சரிக்கை
காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் மேட்டூர் அணை தனது முமு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வரக்கூடிய நீர்வரத்தை, பொறுத்து முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அதிகளவு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
மேலும், பருவமழைகாலம் என்பதாலும், மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவில் இருப்பதாலும், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து எந்த நேரத்திலும் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கவோ அல்லது குறையவோ கூடும். எனவே, பருவமழை காலம் முடிவடையும் வரை காவிரி மற்றும் கொள்ளிடக்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும், சலவைத் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில்
குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை ஓட்டிச் செல்லவோ வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்