காயகல்ப் விருதினை பெற்று சாதனை படைத்துள்ள கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை.
காயகல்ப் விருதினை பெற்று சாதனை படைத்துள்ள கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, துாய்மை, சுகாதாரம் மற்றும் நோய் தொற்று பரவலை தடுத்தல் பணியில் சிறந்து விளங்கியதற்காக மாநில அளவிலான காயகல்ப் விருது மற்றும் ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையை தட்டிச் சென்று சாதனைப் படைத்தது.
மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் துாய்மை, சுகாதாரம் மற்றும் நோய் தொற்று பரவலை தடுத்தல் ஆகிய பணியில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்து காயகல்ப் விருது வழங்கி வருகிறது. மேலும், இந்த விருதுடன் மருத்துவமனையின் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கு, ரூ. 50 லட்சம் வழங்கப்படுகிறது. 2023-2024ம் ஆண்டுக்கான காயகல்ப் விருதுக்கான தேர்வில், மாநில முழுவதிலும் உள்ள 35 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் பங்கு பெற்றன.
இந்த மருத்துவமனைகளில் மாநில அரசுகளின் சிறப்புக் குழுக்கள் நேரடி கள ஆய்வு செய்தன. கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பத்மநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ரியாஸ், செவிலியர் ஓமனா ஆகியோர் கடந்த ஜன., 22, 23ம் தேதிகளில் சிறப்புக் குழு ஆய்வு செய்து தங்களது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. அதில், கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 91.71 மதிப்பெண்ணும், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 92.57 மதிப்பெண் பெற்று 2 மருத்துவமனைகளும் இணைந்து முதல் பரிசான காயகல்ப் விருதுடன், ரூ. 50 லட்சம் பரிசையும் தட்டிச் சென்றன.