ஆசைக்கு இணங்க மறுத்த இளம் பெண் வெட்டி கொலை. முதியவர் செய்த வெறி செயல்.
ஆசைக்கு இணங்க மறுத்த இளம் பெண் வெட்டி கொலை. முதியவர் செய்த வெறி செயல்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி செங்கமேட்டு கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி (25) என்ற பெண்ணிற்கு, கார்த்தி என்பவருடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் குழந்தையைக் கணவரிடமே விட்டுவிட்டு, கடந்த ஒரு வருடமாகத் தனது தந்தை வீட்டில் காமாட்சி வசித்து வந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த அதே கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் (65) என்ற முதியவர், காமாட்சியைத் தனது ஆசைக்கு இணங்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு காமாட்சி கடுமையாக மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு காமாட்சி வேலைக்காக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த மகேந்திரன் அவரைப் பலவந்தமாக இழுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காமாட்சி, மகேந்திரனைக் காரிலேயே செருப்பால் அடித்து, அதனைத் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். மேலும், அந்த வீடியோவை மகேந்திரனின் குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்தச் செருப்படியால் கடும் கோபமடைந்த மகேந்திரன், காமாட்சியைப் பழிவாங்கக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இன்று காலை காமாட்சியின் வீட்டிற்குச் சென்ற மகேந்திரன், அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி கொடூரமாகக் கொலை செய்தார். அப்போது மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து தடுக்க முயன்ற காமாட்சியின் தந்தை பண்டுரங்கனையும் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு மகேந்திரன் தப்பியோடினார். தகவல் அறிந்து வந்த அண்ணாமலை நகர் போலீஸார், காமாட்சியின் உடலைக் கைப்பற்றிக் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசைக்கு இணங்காததால் 25 வயதுப் பெண்ணை 65 வயது முதியவர் வெட்டிக்கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.