சர்வாதிகார பாஜக அரசை தூக்கி எறிவோம்: ஜனநாயகம் வெல்லும்; அதை காலம் சொல்லும்: திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
சர்வாதிகார பாஜக அரசை தூக்கி எறிவோம்: ஜனநாயகம் வெல்லும்; அதை காலம் சொல்லும்:
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

திருச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்.பி.,யுமான தொல்.திருமாவளவன் தலைமையில், ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாடு நடைபெற்றது.
முதலில், மாநாட்டில், பங்கேற்ற தலைவர்கள் ஜனநாயக சுடர் ஏந்தி உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திருமாவளவன் நினைவுப்பரிசு வழங்கினார். வைகோ சால்வை அணிவித்து வரவேற்றார்.
மேடையில் இருந்தபடி, திருமாவளவனுடன் இணைந்து, கையசைத்த முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

ஜனநாயகத்தை பாதுகாக்க, திருமாவளவன் இந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறார், தலைவருக்கும் (கருணாநிதி), எனக்கும் தோளோட தோளாக நிற்பவர். நமக்கிடையே இருப்பது கொள்கை உறவு.
ஈ.வெ.ரா.,வையும் அம்பேத்கரையும் பிரிக்க முடியாதது போல், தி.மு.க.,வையும், விடுதலை சிறுத்தைகளையும் பிரிக்க முடியாது. மரக்காணம் பல்கலைக்கு அம்பேத்கர் பெயர் வைத்ததும், சென்னை சட்டக் கல்லுாரிக்கு ஈ.வெ.ரா., பெயர் வைத்ததும் தலைவர் கருணாநிதி தான்.
புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்திப் பிடித்த இயக்கம் தி.மு.க., அம்பேத்கரை போற்றும் பட்டியலின மக்களை பாதுகாக்கும் அரசு தான், திராவிட மாடல் அரசு.
தி.மு.க., ஆட்சியில், அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் சிலை அமைத்து திறக்கப்பட்டது. அவரது படைப்புகள் செம்பதிப்பாக வெளியிடப்பட உள்ளது. அவரது பெயரால் தொழில் முனைவோர் முனையம், வீடு கட்டும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. திராவிட தமிழின உணர்வோடு தான், இவற்றை செய்து வருகிறோம்.
நம் நாட்டை சமூக நீதி, சமத்துவம் கொண்டாக நாடாக்க, இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காகத் தான், இந்த மாநாட்டை கூட்டி இருக்கிறார். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், லோக்சபா தேர்தலில் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி. சர்வாதிகார பா.ஜ., அரசை துாக்கி எறிவோம்.
ஒன்றிய அரசும், மாநில அரசும் தனித்தனி அதிகாரம் பெற்றவை. ஒன்று மற்றொன்றுக்கு அடிபணியவில்லை;

ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது, என்று சொன்னார் அம்பேத்கர். அதைத் தான், நாம் சொல்கிறோம். மாகாணங்கள் சகலவிதமான தேசிய அம்சங்களை கொண்டிருக்கின்றன. தேசிய பண்பு முழுமையாக மலர சுதந்திர வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும், என்றும் சொல்லி இருக்கிறார்.
அத்தகைய எண்ணம் கொண்ட ஒன்றிய அரசை உருவாக்க வேண்டும். அதன் துவக்கமாக பா.ஜ., ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில், பா.ஜ., என்பது பூஜ்யம். அதனால், தமிழகத்தில் பா.ஜ.,வைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் மட்டுமின்றி, அகில இந்திய அளவில் பா.ஜ.,வை வீழ்த்த வேண்டும். அதற்கான அடித்தளம் தான் ‘இண்டியா’ கூட்டணி. பா.ஜ., அரசை வீழ்த்துவதை இலக்காக கொண்ட அனைவருக்கும் இந்த கூட்டணியில் இணைதிருக்கின்றனர்.
பா.ஜ., எதிர்ப்பை, தனிப்பட்ட ஒரு கட்சிக்கான எதிர்ப்பாக சொல்லி விட முடியாது. இந்தியாவின் ஜனநாயகத்தை மக்கள் ஆட்சியை, பன்முகத் தன்மையை ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்ற பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது, என்பது தான் நம் இலக்கு. பா.ஜ., ஆட்சிக்க வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி இருக்காது. ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. ஏன், மாநிங்களே இருக்காது. இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். மாநிலங்களை கார்ப்பரேஷன்களாக்கி விடுவர். காஷ்மீரை இரண்டாக பிரித்து, அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தனர். இது பா.ஜ., பாணியில் சர்வாதிகாரம். அந்த நிலை தான் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும். கேள்விகள் இல்லாத நாடாளுமன்றம், 140 எம்.பி.,க்ளை சஸ்பெண்ட் செய்தது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அவமானம் இல்லலையா? உலக நாடுகள் என்ன நினைக்கும்; சிரிக்க மாட்டார்களா? உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டு, நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வது தான் ஜனநாயகமா? என்று கேட்க மாட்டார்களா? உலக நாடுகளின் முன், இந்தியாவுக்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்திய ஆட்சியாக பா.ஜ., ஆட்சி உளளது. இன்னும் சொல்லப் போனால், இந்தியாவை சர்வாதிகார நாடகா மாற்றினாலும் மாற்றி விடுவர். நாம் உணர்ந்திருக்கும் நெருக்கடி ரொம்ப ரொம்ப மோசமானது. மாநிலத்துக்கு மாநிலம் அரசியல் நிலை மாறுபடும். ஒன்றியத்தில் யார் ஆட்சி நடத்த வேண்டும் என்பதை, மனதில் வைத்து அனைவரும் செயல்பட வேண்டும்.
பா.ஜ., ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் எல்லாருக்கும் இலக்காக இருக்க வேணடும். பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுக்கள், எக்காரணத்தை கொண்டும் சிதறக் கூடாது.
பகைவர்களுடன் சேர்த்து துரோகிகளையும் மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். வரலாறு என்ன சொல்ல வேண்டும் தெரியுமா? ‘இண்டியா’ கூட்டணி அமைத்து, இந்தியாவின் ஆட்சியை கைபற்றினர், என்பது தான் வரலாறாக இருக்க வேண்டும். மேயர் தேர்தலையே ரத்து செய்யும் அளவுக்கு பாஜ.,வுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை பயன்படுத்தி, கிடைத்திருக்கும் வாய்ப்பை இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால், பா.ஜ., கட்சி நிச்சயம் தோற்கடிக்கப்படும். ஜனநாயகம் வெல்லும்; அதை காலம் சொல்லும்.
இவ்வாறு, அவர் பேசினார்.