மலைக்கோட்டை பகுதி வணிகர்களுக்கு இந்த ஆண்டு கருப்பு தீபாவளி -வணிகர்கள் குமுறல். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அறிக்கை.

மலைக்கோட்டை பகுதி வணிகர்களுக்கு இந்த ஆண்டு கருப்பு தீபாவளி -வணிகர்கள் குமுறல். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அறிக்கை.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் வியாபாரமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக தீபாவளி விற்பனை சிறப்பாக இருந்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகிறது. அதிலும் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை அதல பாதாளத்திற்கு சரிந்து விட்டது. குறிப்பாக ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள என்.எஸ்.பி. ரோடு, நந்தி கோவில் தெரு, சின்னக்கடைவீதி, தேரடி கடைவீதி, பெரிய கடை வீதி, மேலப்புலி வார்டு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை கடைகள், தரைக்கடைகள் என்ற பெயரில் செய்யப்பட்டிருந்த அளவுக்கதிகமான ஆக்கிரமிப்புகளாலும், அதனை சிறிதளவும் கண்டு கொள்ளாத காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவும், பல தடைகளை தாண்டி வாடிக்கையாளர்கள் வணிக நிறுவனங்களுக்கு எளிதாக வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாலும் தீபாவளி விற்பனை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு சரிந்து உள்ளது.

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தேடிச் சென்று வாடிக்கையாளர்கள் விரும்பும் பொருட்களாக தேடி வாங்கி வந்து கடைகளில் குவித்து வைத்திருந்தாலும் அதனை வாங்கிச் செல்லத்தான் வாடிக்கையாளர்கள் வரவில்லை. வரவில்லை என்பதை விட வரமுடியவில்லை என்பதை உண்மையாகும். காரணம் மேற்சொன்ன வணிக பகுதிகளில் ஏற்கனவே நூற்றுக்கணக்கானோர் ஆக்கிரமிப்பு செய்து தரைக்கடைகள் அமைத்துள்ள நிலையில் நாள்தோறும் புதிது புதிதாக பல நபர்கள் வந்து சாலையை ஆக்கிரமித்து தரைக்கடைகள் அமைப்பதும், தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்வதும், இவ்வாறு வரும் நபர்களை சிலர் தங்களது ஆளுகைக்கு கீழ் உட்படுத்திக் கொள்வதும், அவர்களது ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு தாங்கள் பாதுகாப்பதாக உறுதியளிப்பதும், அதற்கு கைமாறாக பெற வேண்டியதை பெற்றுக் கொண்டு மாமூல் வாழ்க்கை நடத்துவதும், இதனை தடுக்க வேண்டிய காவல்துறையினர் தங்கள் கடமைகளை மறந்து மேற்படி நபர்களுக்கு துணை போவதும், தங்களுக்கும் அதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் போல் மாநகராட்சி அதிகாரிகள் நடந்து கொண்டதும் வணிகர்கள் தங்களது விற்பனையை இழக்க காரணமாக அமைந்து விட்டது.

கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது என்று செய்திகள் வெளியிடபட்டாலும் ஆக்கிரமிப்பாளர்களால் 80 சதவிகித சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் 20 சதவிகித இடத்தில், மக்கள் நடந்து சென்றாலே கூட்டம் நிறைந்தது போலத்தானே இருக்கும்.
ஒரு காலத்தில் அனைத்து மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எளிதாக வந்து சென்ற இச் சாலையில் தள்ளுவண்டிகடைகள், தரைக்கடைகள், நடைபாதைக்கடைகள், இன்னும் பலர் நடுரோட்டில் நின்றவாறே வியாபாரம் செய்வதால் காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யாமல் “டிராபிக் ஜாம்” என்று கூறி பேரிகார்டு கொண்டு சாலைகளை அடைத்து விட்டு தங்கள் கடமை முடிந்ததாக கருதிக்கொள்கின்றனர்.

என்றாவது ஒருநாள் சாலை அடைப்பு என்ற நிலை, மாறி பின்பு சனி, ஞாயிறுகளில் அடைப்பு என்ற நிலை மாறி தற்போது நாள்தோறும் சாலை அடைப்பு என்கிற ஆயுதத்தை கையில் எடுத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி விட்டதாக காவல்துறையினர் கணக்கு காட்டுகிறார்கள்.

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மாநகர காவல் துறை, என மாறி மாறி மனு கொடுத்தாலும் தற்போது வரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
மலைக்கோட்டை கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தையும் அதனை ஒட்டியுள்ள நடைபாதைகளையும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது என்றே தெரியவில்லை.
அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அரசிற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஆயிரக்கணக்கான ஏழை – நடுத்தர மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து வரும் வணிக நிறுவனங்கள் போதுமான வியாபாரம் இல்லாத நிலையில் ஆள்குறைப்பு செய்ய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மாநகர காவல் துறை ஆகியோரின் அலட்சியப் போக்கால் மலைக்கோட்டை பகுதி வணிகர்களுக்கு வியாபாரமின்மை காரணமாக இவ்வாண்டு கருப்பு தீபாவளியாக அமைந்துவிட்டது என்பதை மிகுந்த வேதனையுடன் குறிப்பிட வேண்டியுள்ளது. வருங்காலத்திலும் இதே நிலை தொடருமானால் மலைக்கோட்டை பகுதி வணிகர்களை பொறுத்தவரை இந்த ஆண்டு மட்டுமல்ல இனி ஒவ்வொரு ஆண்டும் கருப்பு தீபாவளி தான். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்