சரக்கு வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு உயிரிழந்த விவசாயின் உறவினர்கள் போராட்டம்.
சரக்கு வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு உயிரிழந்த விவசாயின் உறவினர்கள் போராட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே வடக்கு வண்டானம் கிராமத்தைச் சேர்ந்த வெயில்முத்து என்பவரது மகன் மாரியப்பன் (60) . விவசாயியான இவர் நேற்று மாலை பயிர்களுக்கு களைக்கொல்லி மருந்து வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் தனது ஊரிலிருந்து பசுவந்தனைக்கு சென்றுள்ளார். அங்குள்ள கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி உள்ளார். பசுவந்தனை – கோவில்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று மாரியப்பன் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்தது. இதில் சம்பவ இடத்திலேயே விவசாயி மாரியப்பன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பசுந்தனை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். புதுப்பட்டி அருகே உள்ள தனியார் கிரசர் நிறுவனம் அருகே நின்ற விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்த விவசாயி மாரியப்பன் உடலை வாங்க மறுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . விவசாயி மாரியப்பன் உயிரிழப்புக்கு உரிய நியாயம் வேண்டும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த விவசாயி மாரியப்பன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.