தொடரும்…. பட்டாசு வெடி விபத்து மரணங்கள் கையூட்டு வாங்கும் அதிகாரிகள் தான் காரணமா..?
-இது சிவகாசி சோகம்
தொடரும்…. பட்டாசு வெடி விபத்து மரணங்கள் கையூட்டு வாங்கும் அதிகாரிகள் தான் காரணமா..?
இது சிவகாசி சோகம்
விருதுநகர் மாவட்டம் கட்டனர்பட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வனஜா பட்டாசு ஆலையில் ஊழியர்கள் வழக்கம் போல் பட்டாசு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் தான் மதியம் 2.30 மணி அளவில் திடிரென்று வெடி விபத்து ஏற்பட்டு 4 அறைகள் மோசமாக சேதம் அடைந்தன. இந்த பட்டாசு ஆலை விபத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் இதுவரை 23 பேர் பலியானதாக சொல்லப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிக பலி கொண்ட பட்டாசு விபத்து என்று இதை தான் சொல்கிறார்கள். சுமார் 1௦ கிலோ மீட்டருக்கு நில அதிர்வு இருந்ததாகவும் ஏதோ நில நடுக்கம் தான் ஏற்பட்டுள்ளதோ என்று பொதுமக்கள் முதலில் அச்சப்பட்டுள்ளனர். பின்னர் தான் அவர்களுக்கு இது பட்டாசு வெடி விபத்து என்று தெரிந்துள்ளது. இந்த வெடி விபத்தில் காயம் அடைந்த பலர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வனஜா பட்டாசு ஆலை கோவிந்தநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமானது என்றும் வெடி விபத்து நடந்தவுடன் அவர் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் சொல்கிறார்கள். விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா, எஸ்.பி ஸ்ரீநாதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்ததோடு மீட்பு பணியையும் வேகப்படுத்தினர். காயம்பட்டவர்களை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிராபகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்ததோடு, அரசு மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள் விதி மீறலால் இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வருகிறது. தேர்தல் நேரம் என்பதால் நிவாரணம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று முதல்வர் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என்றார்கள். மேலும் தலைமறைவான ஆலை உரிமையாளர் முத்து மாணிக்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்ற போது இரவு 7 மணி அளவில் மீண்டும் அந்த ஆலையில் உள்ள இன்னொரு அறையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த அதிகாரிகள் வெடி சத்தம் கேட்டவுடன் தலை தெறிக்க ஓடி பதுங்கி கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் மயிரிழையில் உயிர் தப்பியதாக சொல்லப்படுகிறது. மேலும் அப்போது பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மகளிர் காவலர்கள் சிலர் ஜேசிபி ஆபரேட்டர் உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் 12 பேர் காயம் அடைந்தனர் இவர்கள் அனைவரும் விருதுநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
விபத்து நடந்த பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இங்கு மத்தாப்பு மற்றும் சோல்சா வெடிகள் தயாரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க அனுமதி இல்லை. இந்த நிலையில் தடையை மீறி மணி மருந்துகளைப் பயன்படுத்தி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கபட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் விதிமுறைகளை மீறி ஞாயிற்றுக்கிழமை ஆலை இயங்கியது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த பட்டாசு ஆலை, அதிபர் முத்துமாணிக்கம் மீது வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வெடிபொருட்களைக் கையாளுதல், சட்டவிதிகளை மீறுதல், கொலை அல்லாத மரணத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் செயல்படுதல் உள்ளடக்கி 6 பிரிவுகளில் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் முத்துமாணிக்கம், கடந்த ஏப்ரல் 21 செவ்வாய்க்கிழமையன்று விருதுநகர் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த 25 பேர் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராடி வந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு உயிரிழப்புக்கும் தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடுக்கான காசோலை வழங்கிய பின்பே உடல்களை வாங்கினர். அதேபோல் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தலா ரூ.3.5 லட்சமும் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் உரிய வழிகாட்டு முறைகளை வகுக்க வில்லை என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார்கள். அதாவது உரிய உரிமம், தீயணைப்பு வசதிகள், முறையான பயிற்சி மற்றும் அதிகாரிகள் குழுவின் தொடர் ஆய்வு, போன்ற வழி முறைகளை சரியாக செய்யாததால் தான் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன என்று சொல்கிறார்கள்.
இந்த பட்டாசு தொழில் மூலமாக பல கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்து வருவதால் தான் இந்த சிவகாசி பகுதிக்கு பல அதிகாரிகள் பணிமாற்றம் கேட்டு வருகிறார்கள். அதாவது வருவாய்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை என்று பட்டாசு தொழில் மூலமாக வருவாய் வரும் அத்தனை துறை அதிகாரிகளும் இதன் மூலமாக கொள்ளை லாபம் பெறுகின்றனர். அதேபோல் லஞ்சமும் அதிகாரிகளுக்கு பெரிய அளவில் கொடுக்கப்படுகிறது. மேலும் அரசியல்வாதிகள் எந்த கட்சியை சார்ந்தவர்கள் என்றாலும் நன்கொடை, கட்சி விழா என்று பட்டாசு ஆலை அதிபர்களிடம் பெரிய அளவில் ஒரு தொகையை கறந்து விடுகின்றனர். இதனால் தான் எந்த பெரிய விபத்து பட்டாசு ஆலைகளில் நடந்தாலும் அது சம்பந்தமான போராட்டங்கள் பெரிய அளவில் நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும் அதை பிசுபிசுக்க வைத்து விடுகிறார்கள். ஆனால் வருடா வருடம் வெடி விபத்தால் மரணத்தை தழுவும் தொழிலாளர்கள் நிலைமை தான் அந்தோ பரிதாபம்.