கோட்டையில் கொடி ஏற்ற தயங்காதே.. கனிமொழியை ‘லோக்கல்’ அரசியலுக்கு அழைக்கும் உடன்பிறப்புகள்! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு.

கோட்டையில் கொடி ஏற்ற தயங்காதே.. கனிமொழியை ‘லோக்கல்’ அரசியலுக்கு அழைக்கும் உடன்பிறப்புகள்! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு.

கனிமொழியின் பிறந்த நாளிலிருந்து திமுகவில் ஒரு விவகாரம் அதிகமாக பேசப்படுகிறது. ‘அகம் காக்க வா’ என கனிமொழியின் ஆதரவாளர்கள் பிறந்தநாள் கேக் வெட்டிய நிலையில் தற்போது “கோட்டையில் கொடியேற்ற தயங்காதே..” “நீ நினைத்தால் எதுவும் நடக்கும்”என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. டெல்லி அரசியலில் இருந்து கனிமொழி தமிழக அரசியலுக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை அவரது ஆதரவாளர்கள் வலுவாக முன்வைத்து வருகின்றனர்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் திமுக ஆதரவாளர்களிடையே ஒரு அரசியல் உற்சாகத்தை உருவாக்கும் நிகழ்வாகவே மாறி இருக்கிறது. இந்த ஆண்டு கூட அதே சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடந்த ஜனவரி 5ஆம் தேதி கனிமொழி தனது பிறந்த நாளைக் கொண்டாடிய போது, சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் திமுகவினர் கேக் வெட்டி விழாவாக கொண்டாடினர். ஆனால் இந்த முறை கேக்கில் எழுதப்பட்ட வாசகங்களும், இணையத்தில் வைரலாகும் வீடியோவும் திமுக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

சென்னையில் கனிமொழிக்காக 20 கிலோ எடையுள்ள பெரிய கேக் வெட்டி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொண்டாடினர். அந்த கேக்கில் “புறம் காத்தது போதும்… அகம் காக்க வா” என்ற வாசகம் எழுதியிருந்தது. இந்த வாசகமே எல்லோரையும் சற்று சிந்திக்க வைத்தது. ஏனெனில் இதுவரை கனிமொழி வெளி அரசியலாக கருதப்படும் டெல்லி அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்ட அரசியலிலும் கனிமொழி நேரடியாக களம் இறங்க வேண்டும் என்பது அவரது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு வீடியோ பெரிய கவனம் பெற்று வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர், ‘2026 போட்டியிடுகிறார் கனிமொழி’ என செய்தித்தாளை வாசிப்பதிலிருந்து தொடங்கி, பின்னர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைந்து கனிமொழியை சட்டப்பேரவைக்கு அழைத்து வருவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் எம்.எல்.ஏ இருக்கையில் அமர்ந்து இருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. “நீ நினைத்தால் எதுவும் நடக்கும்… கோடி மக்கள் உன் பின்னால்… முடிவெடு…” “கோட்டையில் கொடி ஏற்ற தயங்காதே இனி..” என்ற பாடல் வரிகள் அந்த வீடியோவில் ஒலிக்கின்றன.

இதன் மூலம், கனிமொழி இனி நாடாளுமன்றத்திலிருந்து தமிழக சட்டப்பேரவைக்கு வர வேண்டும் என்ற ஆதரவாளர்களின் ஆசை வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. கனிமொழி தற்போது திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும், துணைப் பொதுச் செயலாளராகவும் முக்கிய பொறுப்பில் உள்ளார். டெல்லியில் திமுக மற்றும் தமிழக அரசின் குரலாக அவர் வலுவாக செயல்பட்டு வருகிறார். அதே சமயம், உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசியலில் முன்னணியில் இருக்கும் நிலையில், கனிமொழிக்கும் மாநில அரசியலில் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

திமுகவில் பெண்களின் ஆதரவை பலப்படுத்துவதற்கும் கனிமொழி முக்கிய முகமாக செயல்படுகிறார். இதனால், 2026 தேர்தலில் அவர் தமிழக அரசியலில் நேரடியாக களம் காண்பாரா? என்ற கேள்வி மீண்டும் முன்வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களில் காணப்பட்ட கேக் வாசகங்களும், வைரல் வீடியோவும் அந்த கேள்விக்கு மேலும் வலு சேர்த்துள்ளன. இந்நிலையில், கனிமொழி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவாரா? மாநில அரசியலுக்கு முழுமையாக திரும்புவாரா? அல்லது டெல்லி அரசியலிலேயே கவனம் செலுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்