திருச்சி மாவட்டத்தில் 6.98 லட்சம் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுச் தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் 6.98 லட்சம் குடும்பத்தினருக்கு
பொங்கல் பரிசுச் தொகுப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 6.98 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது விநியோகத்திட்டத்தின் கீழ், பொங்கல் பரிசு வழங்க தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். பரிசுத்தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் முழுக் கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படுகிறது.
இப்பொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்கள் சிரமமின்றி பெறும் வகையில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஜனவரி 7 ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு அவரவர் இல்லங்களில் வழங்கப்படும்.
ஜனவரி 10 முதல் 14 ஆம் தேதி வரை அனைத்து நாள்களிலும் சுழற்சி முறையில் பரிசுத் தொகுப்புகள் விநியோகிக்கப்படும். நடைமுறையிலுள்ள அரிசி பெறும் 6,97, 837 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 891 குடும்பங்கள் என மொத்தம் 6,98,728 குடும்பங்களுக்கும் திருச்சியில் செயல்பட்டு வரும் 1,280 ரேசன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் இத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் குறித்த புகார்களை, உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களிடம் நேரிலோ அல்லது மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0431}2411474, அல்லது கைப்பைசி 9445045618,, சென்னை எண் 044}28592828 , அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 19671800 4255901 ஆகியவற்றில் தெரிவிக்கலாம்.