செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளருக்கு ரயில்வே துறை சார்பில் சன்மானம் வழங்கி பாராட்டு!
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரை காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளருக்கு ரயில்வே துறை சார்பில் சன்மானம் வழங்கி பாராட்டு!
தூத்துக்குடி மழை வெள்ளத்தில் தண்டவாளத்தில் மண்அரிப்பு ஏற்பட்டதை கண்டறிந்து திருச்செந்தூர்-சென்னை இடையேயான செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை உரிய நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்திய ரயில்வே பணியாளர் யார்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு ரயில்வே துறை சார்பில் நிதி வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இடைவிடாது மழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலியில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் கடந்த 17 ம் தேதி மாலை 6.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இதில் மொத்தம் 800 பயணிகள் பயணித்தனர். இந்த ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் சென்ற நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.
அதாவது ஸ்ரீவைகுண்டத்துக்கு பிறகு சில இடங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தண்டவாளத்தில் மண்அரிப்பு ஏற்பட்டது. இதனால் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கின. இதையடுத்து தான் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 3 நாட்கள் அங்கு தங்கிய பயணிகளை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் மண்அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்குவது என்று தகவல் கொடுத்து 800 பேரின் உயிரை காப்பாற்றியது யார்? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்த சிறப்பான பணியை செய்தவர் ரயில்வே பணியாளர் செல்வக்குமார். செய்துங்கநல்லூரை சேர்ந்த இவர் தண்டவாள பராமரிப்பாளராக பணியாற்றி வருகிறார். கனமழையின் காரணமாக தண்டவாளத்தில் பிரச்சனை உள்ளதா என இவர் கடந்த 17 ம் தேதி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஸ்ரீவைகுண்டம்- தாதன்குளம் இடையே மண்அரிப்பால் தண்டவாளம் அந்தரத்தில் தொங்குவதை அவர் பார்த்தார். உடனடியாக அவர் பொறியாளருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தான் பாதுகாப்பு கருதி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் ரயில்வே பணியாளர் செல்வக்குமாருக்கு ரயில்வே துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.