சாரண, சாரணியர் இயக்க 75ஆவது தேசிய அளவிலான பெருந்திரளணி. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்.

சாரண, சாரணியர் இயக்க 75ஆவது தேசிய அளவிலான பெருந்திரளணி. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்.

சாரண, சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் தேசிய அளவிலான பெருந்திரளணி மணப்பாறையில் ஜன.28-ந்தேதி முதல் பிப்.3 – ந்தேதி வரை நடைபெறும் என அமைச்சரும், தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு பெருந்திரளணி நடைபெறுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:-

உலக நாடுகளும், இந்திய மாநிலங்களும் திருச்சி மாவட்டம், மணப்பாறையை உற்று நோக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. சாரணர் இயக்க தேசிய அளவிலான பெருந்திரளணியை தமிழகத்தில் நடத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்த அனுமதியை முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு வழங்கியுள்ளார். கருணாநிதி நூற்றாண்டு பெருந்திரளணி எனவும் இதற்கு பெயர் சூட்டப்பட்டிருப்பது கூடுதல் பெருமைக்குரியது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சாரணர் இயக்கத்தின் இருபாலரும் (15 ஆயிரம் பேர்) பங்கேற்கவுள்ளனர். எனவே, அனைவரது பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவம், உணவு, குடிநீர், தங்கும் வசதி என அனைத்து தேவைகளையும் அந்தந்த துறையினர் கண்ணும், கருத்துமாக இருந்து செய்துர வேண்டும்.

ஜன.28-ந்தேதி தொடங்கி பிப்.3-ந் தேதி வரை 7 நாள்களும் உலக நாடுகள் நம்மை உற்றுநோக்கும். பிரதமர், குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோரும் கூர்ந்து கவனிக்கும் பேரணியாகும். இதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும். முதல்நாளில் ஏற்றப்படும் பிரமாண்ட தேசியக் கொடி 7 நாளும் கம்பீரமாக பறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியாவிலேயே பிற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் இந்த இயக்கம் முன்னிலையில் உள்ளது. இயற்கை இடர்பாடுகளின்போது உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், தாற்காலிக பாலம் அமைத்தல், நிவாரண முகாம்களுக்கு கூடாரம் அமைத்தல் என ராணுவத்துக்கு இணையாக பணியாற்றுவர். அந்தக் காட்சியை வரும் ஜன.28-ந் தேதி தொடங்கி பிப். 3 – ந் தேதி வரை அனைவரும் நேரில் கண்டறியலாம்.
சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட், பார்முலா கார்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை தமிழகத்தில் நடத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை பெற வாய்ப்பாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக இந்த பெருந்திரளணி மூலமும் உலக அரங்கின் கவனத்தை ஈர்த்து அதிக முதலீடுகளை பெறும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். பெருந்திரளணியை வெற்றிகரமாக நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறையின் 8 இயக்குநர்கள் தலைமையில் 33 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழுவினர் பிரிந்து அனைத்து பணிகளையும் மேற்கொள்வர். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

இக் கூட்டத்துக்கு, கலெக்டர் மா. பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.மதுமதி, சாரணர் இயக்க வைர விழாவின் தலைமை பொறுப்பாளர் (மாநில முதன்மை பேராணையர்) அறிவொளி, மாநகரக் காவல்துறை ஆணையர் ந. காமினி, மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், தொடக்கக் கல்வி இயக்குநர்கள் கண்ணப்பன், நரேஷ், பழனிச்சாமி, நாகராஜமுருகன், இராமேஸ்வரமுருகன், குப்புசாமி, சேதுராமவர்மா, .உஷாராணி, சாரணர் இயக்க தேசிய செயல் இயக்குநர் அமீர்ஷத்ரி, மாநிலப் பொருளாளர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்