தொடரும் இரவு மழை, வெப்பம் குளிர்ந்தது திருச்சி. மக்கள் மகிழ்ச்சி.
தொடரும் இரவு மழை,
வெப்பம் குளிர்ந்தது திருச்சி. மக்கள் மகிழ்ச்சி.
திருச்சியில் கடந்த திங்கள்கிழமை இரவு மழை பெய்தது அதை தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவும் பெய்த மிதமான மழையால் வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது.
திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி எடுத்தாலும், இரவு நேரங்களில் குளிர்ந்த காற்றும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலையில் சுட்டெரித்த வெயில் மாலை 4 மணிக்குப் பின்னர் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. மாலை 6.30 மணிக்கு பிறகு மின்னலுடன் மிதமான மழை பெய்ய தொடங்கிஇரவு சுமார் 10 மணி வரை நீடித்தது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன், கண்டோன்மெண்ட், கே.கே.நகர், மன்னார்புரம், தில்லைநகர், உறையூர், தென்னூர், காந்திச்சந்தை, ஸ்ரீரங்கம் , மலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த இந்த மித மழையால் இயல்பு நிலை சற்று பாதிக்கப்பட்டது. இரு சக்கர வாகன ஓட்டிகள் சற்று அவதிக்குள்ளானாலும் இரவில் குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து பல மணிநேரம் சாரல் காற்றும் தூறலும் காணப்பட்டது.
மேலும் சில நாள்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ள நிலையில், மழை தொடரும் என்ற எதிர்பார்ப்பு திருச்சி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.