பேருந்து – ஆட்டோ மோதல்  ஆட்டோ ஓட்டுநர் சாவு.  4 பேர் படுகாயம். சாலையை அகலபடுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

பேருந்து – ஆட்டோ மோதல்
ஆட்டோ ஓட்டுநர் சாவு.  4 பேர் படுகாயம். சாலையை அகலபடுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

திருச்சி தில்லைநகர் வடவூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்குராஜ் (26). ஆட்டோ ஓட்டுநரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான மாரி (32), பிரசாந்த் (27), பாலமுருகன் (30), மகேஷ் (35), ஆகிய 5 பேரும் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் உள்ள ஒரு கோயில் விழாவுக்காக ஞாயிற்றுக்கிழமை பகலில் ஆட்டோவில் சென்றனர். நிகழ்வு முடிந்து இரவு திருச்சி திரும்பினர்.

கம்பரசம்பேட்டை அருகே முருங்கப்பேட்டை காளியம்மன் கோயில் பகுதியில் ஆட்டோ வந்தபோது, திருச்சியிலிருந்து ஈரோடு சென்ற அரசுப்பேருந்தும் ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில்  ஆட்டோ சாலையில் கவிழ்ந்து சில மீட்டர் தூரம் இழுத்துசெல்லப்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் பலத்த காயமடைந்தவர்களை மருத்துவர்கள் சோதித்த போது ஆட்டோ ஓட்டுநர் அங்குராஜ் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. மற்ற 4 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து ஏற்பட்ட பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த பகுதியில் சாலை குறுகியதாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  விபத்தில் உயிரிழந்த அங்குராஜ்க்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்