ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கழுத்தறுத்து தற்கொலை. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கழுத்தறுத்து தற்கொலை. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகேயுள்ள அல்லித்துறை, பெரியநாயகி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் (65). ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் மதுப்பழக்கத்துக்கு உள்ளாகி, அடிக்கடி மது அருந்தி விட்டு கண்ட இடங்களில் படுத்து கிடந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த அவரது மகன்கள், தந்தை புருஷோத்தமனை கண்டித்ததுடன், இனியும் மது அருந்தினால், மது போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து விடுவோம் என கூறினராம்.
அவரது இரு மகன்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் மூத்த மகன் பாலக்கரை பகுதியில் ஒரு உணவகத்தில் வேலை செய்துகொண்டு தனிக்குடித்தனம் இருந்து வருகிறார்.
மெக்கானிக்கான இளையமகன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் புருஷோத்தமன் வசித்து வந்துள்ளார். திங்கள்கிழமை இளையமகன் வேலைக்கு சென்று விடவே, வீட்டில் மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் இருந்துள்ளனர். மகன்கள் கண்டித்ததால் கடந்த ஒரு மாதமாக மது அருந்தாமல் இருந்த புருஷோத்தமன் மன அழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்தாராம்.
இந்நிலையில் வெளியே சென்றிருந்த மருமகள் மீண்டும் வீடு வந்து பார்த்தபோது புருஷோத்தமன் கழுத்து அறுபட்ட நிலையில் கையில் கத்தியுடன் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்த தகவலறிந்த ஜீயபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் ( டிஎஸ்பி ) பாலச்சந்தர், சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது ஜாபர் மற்றும் போலீஸார், நிகழ்விடம் சென்று புருஷோத்தமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் நிலா வரவழைக்கப்பட்டு, சோதனை மேற்கொண்டதில், வீட்டிலிருந்து சற்று தூரம் ஓடிய பின்னர் நாய் யாரையும் பிடிக்காமல் படுத்து கொண்டது. இது குறித்து சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.