ஓடும் ரயிலில் 1 வயது குழந்தைக்கு ‘ஹான்ஸ்’ கொடுத்த முதியவர். தட்டிக்கேட்ட வாலிபருக்கு சரமாரி தாக்குதல். 3 பேரிடம் ரயில்வே போலீசார் விசாரணை.
ஓடும் ரயிலில் 1 வயது குழந்தைக்கு ‘ஹான்ஸ்’ கொடுத்த முதியவர். தட்டிக்கேட்ட வாலிபருக்கு சரமாரி தாக்குதல். 3 பேரிடம் ரயில்வே போலீசார் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் சந்திப்பில், நேற்று ஓடும் ரயிலில் 1 வயது குழந்தைக்கு போதைப்பொருளான ‘ஹான்ஸ்’ கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காச்சிகுடாவில் இருந்து மூர்தேஷ்வர் நோக்கி சென்ற மூர்தேஷ்வர் எக்ஸ்பிரஸ் ரயில், காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே பெட்டியில் பயணம் செய்த முதியவர் ஒருவர், தாம் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ‘ஹான்ஸ்’ என்ற புகையிலைப் பொருளை அருகில் இருந்த 1 வயது குழந்தையின் வாயில் வைத்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் குழந்தையின் பெற்றோர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், அருகில் அமர்ந்திருந்த ஜோலார்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து முதியவரை தட்டிக்கேட்டார்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு பயணி, தாக்குதல் நடந்த காட்சியை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து ரயில்வே காவல்துறையினருக்கு அனுப்பியதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, மூர்தேஷ்வர் எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், இருப்புப் பாதை காவல்துறையினர் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் ரயிலிலிருந்து இறக்கி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
குழந்தைக்கு போதைப்பொருள் கொடுக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.