ஆம்பூர் அருகே 15 சவரன் நகை திருடிய இளைஞர் கைது. கடன் சுமையை தீர்க்க கைவரிசை என வாக்கு மூலம்.
ஆம்பூர் அருகே 15 சவரன் நகை திருடிய இளைஞர் கைது. கடன் சுமையை தீர்க்க கைவரிசை என வாக்கு மூலம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற வழக்கில் இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை பறிமுதல் செய்தனர்.

ஆம்பூர் அடுத்த உமராபாத் லைப்ரரி தெருவைச் சேர்ந்த முகமது தெளசிப் என்பவரின் மனைவி உஸ்மா பதூல், கடந்த 3-ஆம் தேதி குடும்பத்தினருடன் கடாம்பூரில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். மறுநாள் (4-ஆம் தேதி) வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கம்
கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து உமராபாத் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்களின் அடிப்படையில் கைலாசகிரி சர்ச் தெருவைச் சேர்ந்த சமியுல்லா என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சமியுல்லா திருட்டை ஒப்புக்கொண்டதுடன், உமராபாத் பகுதியில் உஸ்மா பதூல் வீட்டின் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வந்ததாகவும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். கடன் சுமையை சமாளிக்க திட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து அவரிடமிருந்து திருடப்பட்ட 15 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சமியுல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.