4 கோடி நிலத்தை தானம் செய்த பூரணி அம்மாள். எம்.பி கரம்பிடித்து வாழ்த்து.
4 கோடி நிலத்தை தானம் செய்த பூரணி அம்மாள். எம்.பி கரம்பிடித்து வாழ்த்து.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலைபார்த்த இவரது கணவர் உக்கிரபாண்டியன், 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி என்ற பூரணத்துக்கு கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி(30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். கடந்த 5-ம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.
இந்த உலகத்தில் பணம்தான் மிகப் பெரியது என்று பலரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதைவிட பெரியது இந்த உலகில் நிறைய்ய உண்டு. ஆயி பூரணம் அம்மாளின் செயல் அதைத்தான் இந்த உலகிற்கு உரத்து சொல்கிறது. இவர்களுடைய உயர்ந்த எண்ணத்தை குணத்தை பாராட்டியாக வேண்டும். என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் பூரணி அம்மாளின் கரம் பிடித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.