திருச்சி விமான நிலைய ஓடுதள நீட்டிப்பு பணிகளை முடித்து, கூடுதல் விமானங்களை இயக்கவேண்டும். திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சை எம்பிக்கள்குழு மத்திய அமைச்சரிடம் மனு.
திருச்சி விமான நிலைய ஓடுதள நீட்டிப்பு பணிகளை முடித்து, கூடுதல் விமானங்களை இயக்கவேண்டும்.
திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சை எம்பிக்கள்குழு மத்திய அமைச்சரிடம் மனு.
திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளை முடித்து, கூடுதல் விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை , திருச்சி உள்ளிட்ட 4 மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் கொண்ட குழு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை சந்தித்து அளித்துள்ளது.
இது தொடர்பாக, திருச்சி மக்களவை உறுப்பினரும் மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ, சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது :-
திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனைய கட்டடத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தப் புதிய முனையம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கூடுதல் பயணிகளின் விமான நிலையத்தை பயன்படுத்தும் நோக்கில்தான் இந்தப் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் விமான சேவைகள் வழங்கப்பட்டால் மட்டுமே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதற்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போதிய ஓடுதள வசதி இல்லை. ஆகவே, விமான ஓடுதள விரிவாக்கப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டியுள்ளது. அதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் அருண்நேரு, கரூர் தொகுதி உறுப்பினர் செ. ஜோதிமணி, தஞ்சாவூர் தொகுதி உறுப்பினர் முரசொலி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா உள்ளிட்டோர் மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை டெல்லியில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளோம்.
அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
மேலும், இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் (பிஏஎஸ்ஏ) படி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை வழங்க அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மட்டுமே துபை, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படுகிறது. வாராந்திர சேவை அடிப்படையில் ஒரு வாரத்திற்கு 3,760 இருக்கைகள் மட்டுமே இந்த விமானத்தில் நிரப்பப்படுகின்றன. இதனால், வளைகுடா நாடுகளுக்கு செல்ல பயணக் கட்டணமும் பல மடங்கு அதிமாக உள்ளது. ஆகவே, வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர் பெங்களூரு, சென்னை, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகளை பயன் படுத்துகின்றனர். இதனால், திருச்சி விமான நிலையத்துக்கு பயணிகள் மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்குச் சென்று விடுகின்றன. எனவே, திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும்.
இதன் மூலம் பொதுமக்கள் பயனடைவதோடு திருச்சி விமான நிலையத்திற்கு வருவாயும் அதிகரிக்கும் . மேலும் திருச்சியிலிருந்து தில்லி, கொச்சி உள்ளிட்ட நகங்களுக்கு நேரடி விமான சேவைகள் கிடையாது. ஆகவே, திருச்சியிலிருந்து தில்லி, கொச்சி நகரங்களிடையே விமான சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமின்றி புதுக்கோட்டை, தஞ்சை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட அருகாமை மாவட்ட மக்களும் பயனைடய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம்பிக்கள் குழு அளித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பரிசீலித்த அமைச்சர் அவற்றை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளார்.