நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர்குமார் படுகொலை.  சீமான் எச்சரிக்கை.

 நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர்குமார் படுகொலை.  சீமான் எச்சரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே உள்ள மைலோடு மடத்துவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் ராயப்பன். இவரது மகன் சேவியர் குமார் (45). இவர் அரசு போக்குவரத்துக் கழக கன்னியாகுமரி பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவராகவும் இருந்து வந்தார்.

இவரது மனைவி ஜெமினி (40) மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலயத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

மைலோடு ஆலய பங்குத்தந்தையாக நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ராபின்சன் என்பவர் இருந்து வருகிறார். ஆலயம் மற்றும் பள்ளியின் கணக்கு வழக்குகளை சேவியர் குமார் அவ்வப்போது ஆலய நிர்வாகிகளிடம் கேட்பது வழக்கம். மேலும், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இதுதொடர்பான கேள்விகள் கேட்டு பதிவிட்டு வந்துள்ளார்.

இதற்கிடையே, சேவியர் குமாரின் மனைவி ஜெமினிக்கு பள்ளி நிர்வாகம் மெமோ கொடுத்தது. அதை வாங்க ஜெமினி மறுத்ததால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு ஜெமினி மற்றும் அவரது உறவினர்கள் சிலர், பங்குத்தந்தை ராபின்சனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

அப்போது, தனது கணவர் இனி இதுபோன்று சமூக வலைதளங்களில் எதுவும் பதிவிடமாட்டார் என்றும், தன்னை மன்னித்து ஆசிரியர் வேலை வழங்கும்படியும் ஜெமினி கூறியுள்ளார். சேவியர்குமார் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் கொடுத்தால், வேலை வழங்குவதாக பங்குத்தந்தை ராபின்சன் கூறியுள்ளார்.

நேற்று மதியம் சேவியர் குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வந்த மைலோடு பங்கை சேர்ந்த அன்பியத் தலைவர் வின்சென்ட் என்பவர் சேவியர் குமாரை அழைத்துள்ளார். பங்குத்தந்தையிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் கொடுத்தால், ஜெமினிக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக வின்சென்ட் கூறியுள்ளார். இதனை நம்பிய சேவியர் குமார் மயிலோடு ஆலய வளாகத்தில் உள்ள அருட்பணியாளர் இல்லத்துக்கு சென்றார்.

இதனிடையே, ஆலய வளாகத்தில் உள்ள பங்குத்தந்தை இல்லத்தில் சேவியர் குமார் இறந்து கிடப்பதாக, ஜெமினிக்கு தகவல் கிடைத்தது. உறவினர்களுடன் அங்கு சென்ற அவர், ரத்த வெள்ளத்தில் சேவியர் குமார் இறந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுதார். சேவியர் குமார் இறந்த தகவல் அறிந்ததும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த குளச்சல் சப் டிவிஷன் ஏஎஸ்பி பிரவீன்கவுதம், தக்கலை டிஎஸ்பி உதயசூரியன், இரணியல் இன்ஸ்பெக்டர் (பொ) பெருமாள், தக்கலை ராமச்சந்திரன், இரணியல் சப். இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸார் விசாரணை நடத்தினர். இஸ்திரி பெட்டியால் தலையில் அடிக்கப்பட்டு சேவியர்குமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பங்குத் தந்தை ராபின்சன் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார் அவர்கள் திமுகவின் வன்முறைக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். தம்பியின் உயிர்த்துணையான மனைவியையும், பெற்றெடுத்த இரு பெண் பிள்ளைகளையும் எப்படி தேற்றுவதெனத் தெரியாது மனம் கலங்கி நிற்கிறேன். நம்மோடு உறவாய் இருந்த தம்பியைப் பறிகொடுத்ததை எண்ணி, ஒவ்வொரு நொடியும் உள்ளம் பதைபதைக்கிறது. தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இக்கொடுந்துயர் சூழ்ந்திருக்கும் வேளையில் முழுமையாகத் துணைநிற்கிறேன். தம்பியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் ஏற்பட்டப் பேரிழப்பாகும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாட்டு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு, தம்பி சேவியர்குமார் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் அத்தனைப்பேரும் கைதுசெய்யப்பட்டு, உடனடியாகக் சிறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுமைக்கும் பெரும் போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்

 

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்