குமரியில் காங்கிரஸ் பெண் கவுன்சிலரின் கணவர் வெட்டிக்கொலை.

குமரியில் காங்கிரஸ் பெண் கவுன்சிலரின் கணவர் வெட்டிக்கொலை.

குமரி மாவட்டம் திருவட்டார் மூவாற்றுமுகம் குன்னத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்சன் (வயது 38). திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவரான இவர் தற்போது சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி உஷாகுமாரி. இவர் திருவட்டார் பேரூராட்சியின் 10-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார்.

நேற்று இரவு ஜாக்சன், அந்தப் பகுதியில் உள்ள ஆர்.சி. சர்ச் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் 6 பேர் இருந்தனர். அவர்கள் ஜாக்சன் அருகே வந்து பேசினர். இந்த பேச்சு திடீரென வாக்குவாதமாக மாறியது. அப்போது 6 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியை எடுத்து ஜாக்சனை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

இதனை கண்ட கொலைக்கும்பல் மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. அவர்களை பிடிக்க அந்தப் பகுதியினர் முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜாக்சனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை ஜாக்சன் பரிதாபமாக இறந்தார். பெண் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், தக்கலை துணை சூப்பிரண்டு உதய சூரியன் வந்து விசாரணை நடத்தினர். இதில் சிதறால் அருகே உள்ள புன்ன மூட்டுவிளை வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (32) என்பவர் தலைமையில் வந்தவர்கள் தான் ஜாக்சனை வெட்டிக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

ராஜ்குமாருக்கும், ஜாக்சனுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரும் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முன்விரோதத்தில் தான் தற்போது ஜாக்சன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்