மயான இடத்தையும் விட்டு வைக்காத கனிமவள கொள்ளை? – விவசாயிகள் குற்றச்சாட்டு.
மயான இடத்தையும் விட்டு வைக்காத கனிமவள கொள்ளை? – விவசாயிகள் குற்றச்சாட்டு.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கதவாளம் ஊராட்சிக்குட்பட்ட கல்லுக்குட்டை பகுதியில் பழங்குடியின இருளர் மக்களுக்காக சுமார் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலை பணிக்காக அரசு மற்றும் வனத்துறைக்கு சொந்தமான புறம்போக்கு பகுதிகளில் அனுமதியின்றி மண் மற்றும் பாறைகள் உடைக்கப்பட்டு, இரவு நேரங்களில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், அங்கு வெட்டி எடுக்கப்படும் பாறைகள் அருகிலுள்ள குவாரியில் சேமித்து வைக்கப்பட்டு, பின்னர் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் தயாரித்து விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமின்றி, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியின இருளர் மக்களுக்காக மாவட்ட நிர்வாகத்தால் மயானமாக ஒதுக்கப்பட்ட இடத்திலும் மண் மற்றும் பாறைகள் எடுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக குப்புராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஹேமந்த், கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
சாலை அமைக்கும் பணியின் பெயரில் அரசு மற்றும் வனத்துறைக்கு சொந்தமான பகுதிகளில் நடைபெறுவதாக கூறப்படும் கனிமவள சுரண்டல் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும், விதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.