திருப்பத்தூர் அருகே பாதை தகராறு எதிரொலி. முள்வேலி அமைத்து சாலை மறியல் செய்த பொதுமக்கள் – போலீசார் பேச்சுவார்த்தையால் போராட்டம் முடிவு.

திருப்பத்தூர் அருகே பாதை தகராறு எதிரொலி. முள்வேலி அமைத்து சாலை மறியல் செய்த பொதுமக்கள் – போலீசார் பேச்சுவார்த்தையால் போராட்டம் முடிவு.

திருப்பத்தூர் மாவட்டம், கோனேரிகுப்பம் அருகே மாடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில், பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுப் பாதை தொடர்பான தகராறால் பொதுமக்கள் முள்வேலி அமைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விநாயகபுரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதை தனது பட்டா நிலத்திற்குள் இருப்பதாகக் கூறி, ஞானமூர்த்தி என்பவர் கற்கள் மற்றும் தடுப்புகள் அமைத்து வழியை மறித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாலையின் குறுக்கே முள்வேலிகளை அமைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாதையையே பயன்படுத்தி வருவதாகவும், தற்போது வழி மறிக்கப்பட்டதால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்காக வெளியே செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், நிரந்தரமாக பாதை வசதி ஏற்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சாலை மறியல் காரணமாக பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், கோனேரிகுப்பம் பகுதிக்கு செல்லும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராமிய காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியை அகற்றினர். மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்