மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தேவார திருப்பதிக கல்வெட்டுகள் பதிக்க வேண்டுகோள்
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
அன்புடையீர்! வணக்கம்.
மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தேவார திருப்பதிக கல்வெட்டுகள் பதிக்க வேண்டுகோள்!
*தமிழ்நாட்டில் உள்ள பல்லாயிரக் கணக்கான பழமை வாய்ந்த
திருக்கோயில்களில் உலக அளவில் முக்கிய்துவம் வாய்ந்த கோயிலாகவும்
*சைவ சமய சிறப்பு வாய்ந்த தேவார பாடல் பெற்ற பாண்டியநாட்டு 14 தலங்களில்
முதன்மையான தலமாகவும்
*பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக்குரியதும்
* நக்கீரர் உள்ளிட்ட பற்பல சங்கப் புலவர்கள் வாழ்ந்ததும்
*இறைவனே தமிழ்ப் புலவராக எழுந்தருளியதும்
*நடராஜருக்குரிய பஞ்ச சபைகளில் வெள்ளியம்பலம் என்னும் சபையை உடையதும்
*அருள்திரு நாயன்மார்கள் மற்றும்
மாணிக்கவாசகர் வாழ்க்கையோடு நீண்ட தொடர்புடையதும்
*அருணகிரிநாதர் உள்ளிட்ட அருளாளர்களால் தமிழ் பிரபந்தங்கள் பாடப்பட்டதும்
* சோமசுந்தரப் பெருமான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டியதுமான “திருஆலவாய்” என்னும் புனித தலமாக மதுரை, அருள்தரும் மீனாட்சி அம்பிகை உடனாகிய அருள்மிகு சோமசுந்தரர் (சுந்தரேஸ்வரர்) திருக்கோயில் விளங்குகிறது.
திருக்கோயில் தற்போது கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் எல்லாம் அந்தந்த தலங்களுக்குரிய தேவாரப் பதிகங்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு கோயில் சுவர்களில்
பதிப்பிக்கப்பட்டுள்ளது.
திருமுறைகளை பாதுகாக்கும் வகையிலும் பக்தர்கள் ஆலயத்துக்கு வரும்போது தலத்துக்குரிய தேவாரப் பதிகங்களை பாடி பயன் எய்துவதற்கும் உரிய வகையில் அமைக்கப்படுகிறது.
ஆனால் இத்தனை சிறப்பு வாய்ந்த மதுரை சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தேவாரப் பதிகங்கள் முழுவதும் கல்வெட்டுகளில் பொறிக்கப்படவில்லை என்பது பக்தர்களுக்கு ஒரு குறையாகவே இருக்கிறது.
இத்தலத்திற்கான திருமுறைகள் வருமாறு ;
நீல மாமிடற், றால வாயிலான்
முதலாம் திருமுறை
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு 2ஆம் திருமுறை
மானின்நேர்விழி மாதராய்
3ஆம் திருமுறை
காட்டு மாவ துரித்துரி போர்த்து
3ஆம் திருமுறை
செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
3ஆம் திருமுறை
வீடலால வாயிலாய்
3 ஆம் திருமுறை
வேத வேள்வியை 3ஆம் திருமுறை
ஆலநீழ லுகந்த திருக்கையே
3ஆம் திருமுறை
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை 3ஆம் திருமுறை
வாழ்க அந்தணர் வானவ ரானினம்
3ஆம் திருமுறை (பொது)
வேதியா வேத கீதா 4ஆம் திருமுறை
முளைத்தானை எல்லார்க்கும்
6ஆம் திருமுறை.
திருஆலவாய் குறித்து
மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகப் பாடல்கள் (8ஆம் திருமுறை )
திரு ஆலவாய் அண்ணல் பாடி அருளிய
மதிமலி புரிசை மாடக் கூடல்…
எனத் தொடங்கும் திருமுகப் பாசுரம்
( 11 ஆம் திருமுறை )
மற்றும் பெரியபுராண பாடல்கள்
(12ஆம் திருமுறை )ஆகிய திருமுறைப் பாடல்கள் உள்ளன.
இது தவிர, சந்தக்கவி அருணகிரிநாதர் அருளிய “பரவு நெடுங்கதிர்…”,
“ஆனை முகவற்கு…” போன்ற 11 திருப்புகழ் பாடல்களும்
குமரகுருபர சுவாமிகள் அருளிய சிறப்புக்குரிய ” தொடுக்கும் கடவுள்…” பாடலை உள்ளடக்கிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூல்களும் உள்ளன.
இவை அனைத்தையும் உரிய தமிழ் அறிஞர்களைக் கொண்டு முறையாக மிக அழகாக நேர்த்தியாக பக்தர்கள் பார்த்து படித்து பயந்து கொள்ளும் அளவில் கல்வெட்டுகளாக பதிக்கப்பட வேண்டும் என்பது சிவனடியார்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
பிரம்மாண்டமாக பரந்து விரிந்துள்ள கோயில் வளாகத்தில் தெய்வத் தமிழ் வளர்ச்சிக்கென பக்தர்கள் பார்வையிடும் வகையில் தனியாக திருப்பதிக
கல்வெட்டு மண்டபத்தையே உருவாக்க முடியும்.
தமிழ் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வரும் மாநில அரசு,
தற்போது நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருப்பணியில்
திருப்பதிக கல்வெட்டுகளை கண்டிப்பாக பதிக்க வேண்டுமாக கேட்டுக்கொள்கிறோம்.
தருமபுரம் ஆதீனம் மூலமாக “மந்திரமாவது நீறு…” பதிகம் கல்வெட்டு மட்டும் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.