மகளிர்குழு தலைவியான மனைவியை வெட்டிய கணவர் போலீசார் வலை வீச்சு.
மகளிர்குழு தலைவியான மனைவியை வெட்டிய கணவர் போலீசார் வலை வீச்சு.

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் அருகே உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் வசிப்பவர் பொன்தங்கம் என்ற குணா (35). இவரது மனைவி அமராவதி (28). இவர் மகளிர்குழு தலைவியாக உள்ளார். இத்தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்ப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் அமராவதி தனது இரு சக்கர வாகனத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சுய உதவிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் அல்லிக் குளத்திற்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் கோரம்பள்ளம் பஸ் ஸ்டாப் அருகே செல்லும்போது எதிரே வந்த அவரது கணவர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து பொன் தங்கம் என்ற குணா அமராவதியை வழி மறித்து தகராறு செய்துள்ளனர். பின்னர் சரமாரியாக கழுத்தில் அரிவாளால் வெட்டியுள்ளார் இதில் அமராவதி கழுத்தில் பின்பக்க பகுதியில் பலத்த வெட்டு காயத்துடன் அலறியபடியே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

பின்னர், குணா அங்கிருந்து அவரது பைக்கில் தப்பி சென்று விட்டார். பட்டப் பகலில் அமராவதி பலத்த காயத்துடன் ரோட்டில் கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரது கணவர் பொன் தங்கம் என்று குணா மற்றும் அவரது நண்பர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.