பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம். 50 பெண்கள் உட்பட 250 பேர் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம்.
50 பெண்கள் உட்பட 250 பேர் கைது
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு 50 பெண்கள் உள்பட 250 பேர் கைதானார்கள். இப்போராட்டத்தில், சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான சே.நீலகண்டன், கோ.நாகராஜன், கா.உதுமான் அலி, மா.குமாரவேல், முனைவர் கா.பால்பாண்டி ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அ.பாபு போராட்டத்தில் பங்கேற்றவர்களை வரவேற்று பேசினார்.
இப்போராட்டத்தினை தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பொ.அன்பரசன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஆ.பெரியசாமி போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேச, மாவட்ட நிதி காப்பாளர் சி.ஆரோக்கியராஜ் நன்றி கூறினார்.
இந்தப் போராட்டத்தில்
01.04.2023 க்கு பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்.
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
முதுநிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குனர் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறையில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். கல்லூரி ஆசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு (CAS) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.
சிறப்பு காலம் வரை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர்கள், ஊர் புற நூலகர், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியம், தினக்கூலியில் பணியாற்றி வரும் எம்.ஆர்.பி செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30% மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணி காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி வரன்முறை படுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் ஊழியர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும். தனியார்மய அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். அரசு துறையில் அவுட்சோர்சிங் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தினார்கள்.கோரிக்கைகளை வலியுறுத்தி முதலில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.