சீனாவின் தென்மேற்கு பகுதியில் நிலச்சரிவு: சிக்கியவர்களை மீட்க நேரத்துடன் போராடும் மீட்புப் படையினர்

சீனாவின் தென்மேற்கு பகுதியில் நிலச்சரிவு: சிக்கியவர்களை மீட்க நேரத்துடன் போராடும் மீட்புப் படையினர்

பீஜிங்: கனமழையால் சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சோங்க்சிங் (Chongqing) நகராட்சியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தேசிய அளவில் இரண்டாம் நிலை (Level-2) அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளிக்கிழமை காலை சோங்க்சிங் நகராட்சியின் பெங்ஷுய் (Pengshui) கவுண்டி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. வெளியேறிக் கொண்டிருந்த குடியிருப்பாளர்கள் பலர் மண் மற்றும் பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
காலை சுமார் 8 மணியளவில் ஹன்ஜியா (Hanjia) துணை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள், மலைப்பகுதியில் சிறிய அளவிலான பாறைகள் உருண்டு விழுவதை கவனித்து உடனடியாக அவசர எச்சரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டது.
ஆனால், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு பல குடியிருப்பு கட்டிடங்களை முழுமையாக இடித்துத் தள்ளியது. அப்போது வெளியேறிக் கொண்டிருந்த சிலர் இடிபாடுகளில் சிக்கினர்.
மதியம் 2 மணி வரை 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள 1,100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அபாயத்தைத் தவிர்க்கும் வகையில், சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் மின்சாரம், குடிநீர் மற்றும் எரிவாயு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது 800-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சீனாவின் அவசரகால மேலாண்மை அமைச்சகம் நண்பகல் 12 மணியளவில் புவியியல் பேரிடர்களுக்கான இரண்டாம் நிலை தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. அமைச்சரான ஜாங் செங்ஜோங் (Zhang Chengzhong) தலைமையிலான உயர்மட்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறது.

மேலும் தேசிய இயற்கை பேரிடர் அவசர மீட்பு மையத்திலிருந்து 100 சிறப்பு மீட்புப் பணியாளர்கள் மற்றும் கனரக உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், நிலச்சரிவு ஏற்பட்டதும் பழுப்பு நிற தூசி மேகமாக எழுந்து, “விரைவாக வெளியேறுங்கள்!” என்று மக்கள் அலறியபடி ஓடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளில், வீடுகள், கடைகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் மண் மற்றும் பாறைகளுக்குள் முழுமையாக புதைந்திருப்பதும், மிகப்பெரிய பரப்பளவில் சேதம் ஏற்பட்டிருப்பதும் தெளிவாகக் காணப்படுகிறது.
இதற்கிடையில், வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை வரை சோங்க்சிங் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீட்புப் பணிகள் மேலும் சவாலாக மாறியுள்ளன.

அப்பகுதியில் மரச்சாமான்கள் விற்பனை நிலையம் நடத்தி வரும் பு (Pu) என்ற வியாபாரி, தனது கடையில் பணியாற்றிய மூன்று ஊழியர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.
“காலை 10 மணியளவில் நிலச்சரிவு நடந்ததாக அறிந்தவுடன் அவர்களை பலமுறை அழைத்தேன். ஆனால் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. அவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் மிகவும் பதற்றமாக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

மேலும், ஐந்து மற்றும் ஆறு மாடிகள் கொண்ட பல கட்டிடங்கள் மண் மற்றும் பாறைகளால் நொறுங்கி புதைந்துவிட்டதாகவும், எத்தனை பேர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்பது குறித்து தெளிவான தகவல் இன்னும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் பல்வேறு மீட்புப் பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.

podhigaitimes செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்